site logo
 
பிரபல மலேசிய தமிழ் எழுத்தாளர் திருமதி சரஸ்வதி ஹரிகிருஷ்ணன் எழுதிய மடுவின் மனத்தில் இமயம் என்கிற நூல் வெளியீட்டு விழா கனேடிய தமிழ் மகளிர் மாமன்றம் சார்பில் 23.04.2016 சனிக்கிழமை மாலை சென்னை அண்ணாசாலை உமாபதி கலையரங்கில் சிறப்புற நடைபெற்றது. தொழிலதிபர் திரு வி.ஜி.சந்தோஷம் அவர்கள் வெளியிட தொழிலதிபர் திரு உ. கருணாகரன் அவர்கள் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் திரு ஔவை நடராஜன், திரு வா.மு.சேதுராமன், திரு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் திரு சா. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நூலைப் பற்றியும் நூலாசிரியரைப் பற்றியும் நூலின் நாயகன் நடிகர் திலகம் அவர்களைப் பற்றியும் சிறப்புகளை எடுத்துக் கூறினார்கள். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குழந்தைகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர் திலகம் நடித்த திரைப்படங்களிலிருந்து பாடல்கள் ஒலிக்க, குழந்தைகள் மிகச் சிறப்பாக நடனமாடினர். தில்லானா மோகனாம்பாள் படத்திலிருந்து மறைந்திருந்தே பார்க்கும் மர்ம்மென்ன, திருமால் பெருமை படத்திலிருந்து திருமால் பெருமைக்கு நிகரேது, இரு மலர்கள் படத்திலிருந்து மாதவிப் பொன்மயிலாள் உள்ளிட்ட பாடல்களுக்கு மக்கள் பலத்த கரகோஷத்துடன் வரவேற்பளித்தது, தலைமுறைகளைத் தாண்டியும் நடிகர் திலகத்தின் படங்களும் பாடல்களும் மக்களிடம் நீடித்திருக்கும் என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்த்து.

நிறைவாக நூலாசிரியர் திருமதி சரஸ்வதி ஹரிகிருஷ்ணன் நன்றி கூற விழா இனிதே முடிவடைந்தது.
 
தமிழில் நடிப்புக்கென வெளிவரும் முதல் இதழ் என இப்பருவ இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலாண்டிதழாக வெளிவரும் இதன் இரண்டாம் இதழின் அட்டையில் நடிகர் திலகத்தின் நிழற்படம் மிகவும் அற்புதமாகவும் அதே சமயம் அர்த்தமுள்ளதாகவும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. திரு சோழன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இப்பத்திரிகையின் இந்த இரண்டாம் இதழ் "சிவாஜி சிறப்பிதழாக" மலர்ந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் சார்பில் நமது உளமார்ந்த நன்றி. இவ்விதழில் கீழ்க்காணும் தலைப்பில் நடிகர் திலகத்தின் சிறப்பைக் கூறும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்புக் கோட்பாடுகளும் - பாலசிங்கம் சுகுமார்

சிவாஜி எனும் புதுமுகம் - பிருந்தா சாரதி

நடிகர் திலகம் ஈடு இணையற்ற அற்புதம் - இயக்குநர் மகேந்திரன்

சிவாஜி கணேசன் உடலால் பேசி வசனத்தால் நடித்தவர் - மதியழகன் சுப்பையா

சிவாஜியும் நானும் - யதார்த்தன் இளஞ்சேரன்

இந்த இதழ் தனிச்சுற்றுக்கு மட்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அங்காடிகளில் கிடைக்குமா எனத் தெரியவில்லை.

இருந்தாலும் தொடர்பு முகவரி தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அதில் தொடர்பு கொண்டு மேற்கொண்டு தகவல் பெறலாம்.

நடிப்பு
1/547, ராஜ ராஜன் நகர் 4வது தெரு,
மௌலிவாக்கம்,
(போரூர் பாய் கடை சிக்னல் அருகில்),
சென்னை-600125.
பேச - 8754714692
நடிகர் திலகத்தின் சுயசரிதை நூல் ஆங்கிலப் பதிப்பு சில பிரதிகள் மட்டும் உள்ளன. தேவைப்படுவோர் சிவாஜி பிரபு அறக்கட்டளை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிப்போர் நூல் விலையுடன் அஞ்சல் செலவினையும் சேர்த்து அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
அலுவலக நாட்களில் இந்திய நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

சிவாஜி பிரபு அறக்கட்டளை. தொலைபேசி எண் 91 44 28350126 மற்றும் 91 44 28350127.
முகவரி சிவாஜி பிரபு அறக்கட்டளை, பெசன்ட் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014.
 

தங்கள் பகுதியில் நடைபெற்ற நடிகர் திலகம் பிறந்த நாள் விழா / நினைவு நாள் அனுசரிப்பு பற்றிய செய்திகளையும் நிழற்படங்களையும் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

info@nadigarthilagam.com